இமயமலையில் பனிப்பாறைகள் சரிந்து வெள்ளம் ஏற்பட்டதில், நேபாளம் மட்டுமின்றி சீனாவின் திபெத் பகுதி கடுமையாக பாதித்து நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இந்த வெள்ளத்திற்கு காரணம் என்ன? ஒரு விரிவான அலசல்…
இமயமலையின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் மண் சரிவு காரணமாக நேற்று நேபாளத்தில் உருவான திடீர் வெள்ளம், நேபாளத்தை மட்டுமின்றி சீனாவின் திபெத் பகுதியையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ராசுவா மாவட்டத்தில் போதேகோஷி ஆற்றில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் இன்று காலை 9:00 மணி வரையில் 165 பேர் உயிரிழந்துள்ளனர், 826 பேர் காணாமல் போயுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தின் ராசுவா மாவட்டம் சீனாவின் திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்குள்ள உயரமான இமயமலைப் பகுதியில் இருந்து நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் நீர், பனிக்கட்டி, பாறைகள் மற்றும் சேறு கீழ்நோக்கி பாய்ந்ததால், போதேகோஷி ஆற்றின் கரையோரப் பகுதிகள் பெரும் அழிவை சந்தித்தன.
வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள், சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. வெள்ளம் போதேகோஷி ஆற்றில் இருந்து திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் மக்கள் அடித்துச் செல்லப்படும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள், காண்போரை கண்ணீரில் ஆழ்த்துகிறது.
வெள்ளம் எப்படி ஏற்பட்டது? நிலநடுக்கம் காரணமா?
இந்த பேரழிவின் தொடக்கம் நேபாளம் – சீனா எல்லைப் பகுதியில் உள்ள உயரமான இமயமலைப் பகுதியில் நடந்ததாக முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5,200 மீட்டர் உயரத்தில் இருந்த பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து, சுமார் 1,200 மீட்டர் கீழே உள்ள பள்ளத்தாக்கை நோக்கி சரிந்ததாக செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

‘பனிப்பாறையுடன் மிகப்பெரிய அளவில் பாறைகள் மற்றும் மண் சரிந்ததால், கீழே உள்ள ல்ஹெண்டே ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டிருக்கலாம். இதனால், ஆற்றின் குறுக்கே பனிக்கட்டி, பாறைகள் மற்றும் மண் குவிந்து தற்காலிகமாக ஒரு நீர்த்தேக்கம் உருவானது. பின்னர் அந்தத் தடுப்பு உடைந்தபோது, தேங்கியிருந்த நீர், பனிக்கட்டி, பாறைகள் மற்றும் சேறு ஒரே நேரத்தில் மிகப்பெரிய வேகத்தில் கீழ்நோக்கிப் பாய்ந்தது.
இந்த நீர்ப்பெருக்கு முதலில் போதேகோஷி ஆற்றுக்குள் நுழைந்து, பின்னர் திரிசூலி மற்றும் நாராயணி ஆறுகளின் வழியாக கீழ்நோக்கி சென்றது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் இருந்த பல கிராமங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.’ என, நேபாள அரசும் ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் ஏற்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, காலை 8.37 மணியளவில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக நேபாள அதிகாரிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால், நிலநடுக்கத்தின் காரணமாக பனிப்பாறை அல்லது பாறைகள் சரிந்திருக்கலாம் என்ற சந்தேகம் முதலில் எழுந்தது.

ஆனால், பின்னர் அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS, இந்த seismic event-ஐ ஆய்வு செய்து, அது நிலநடுக்கம் அல்ல என்றும், பனிப்பாறை சரிவு உருவாக்கிய seismic signal என்றும் தெரிவித்துள்ளது.
USGS ஆய்வின்படி, சுமார் 5.2 magnitude அளவுக்கு சமமான seismic energy உருவாகும் வகையில் மிகப்பெரிய பனிப்பாறைச் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் ‘நிலநடுக்கத்தால் வெள்ளம் ஏற்பட்டது’’என்று கூறுவது சரியானதல்ல.
30 நிமிடங்களில் 9 மீட்டர் உயர்ந்த நீர்மட்டம்; 165 பேர் பலி!
வெள்ளத்தின் வேகம் எந்த அளவுக்கு இருந்தது என்பதற்கு கீழ்நோக்கி உள்ள பகுதிகளில் பதிவான நீர்மட்ட உயர்வே முக்கிய சாட்சியாக உள்ளது. கால்ச்சி பகுதியில், வெள்ளநீர் வந்த 30 நிமிடங்களுக்குள் ஆற்றின் நீர்மட்டம் சுமார் 9 மீட்டர் உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், சாதாரணமாக பருவமழையின் போது ஆற்றில் படிப்படியாக அதிகரிக்கும் வெள்ளத்தைப் போல இல்லாமல், மிகக் குறுகிய நேரத்தில் மிக அதிக அளவிலான நீர் கீழ்நோக்கி பாய்ந்துள்ளது.

நேபாளத்தின் Flood Forecasting Division வெளியிட்ட முதற்கட்ட தொழில்நுட்ப அறிக்கையின்படி, தேவ்காட் பகுதியில் மட்டும் சுமார் 2 கோடி கன மீட்டர் கூடுதல் நீர் இந்த வெள்ளத்தின் போது பாய்ந்துள்ளது. வெள்ளத்தின் வேகத்தால் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த நான்கு தானியங்கி நீரியல் கண்காணிப்பு நிலையங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் பலரும் சிக்கி பரிதாபமாக மரணித்துள்ளனர்.
நேபாள உள்துறை அமைச்சகத்தின் National Emergency Operation Centre வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, 165 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 826 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 579 பேர் சுற்றுலாப் பயணிகள். இவர்களில் 113 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள்; 466 பேர் வெளிநாட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போனாரை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
திபெத்திலும் பெரும் பாதிப்பு
நேபாளத்தில் மட்டும் இந்த பேரழிவு ஏற்படவில்லை. சீனாவின் திபெத் பகுதியில் உள்ள கயிரோங் கவுண்டி பகுதியிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளை சேர்த்து, காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,500ஐ நெருங்கியுள்ளது என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. கைலாஷ் – மாநசரோவர் உள்ளிட்ட புனித யாத்திரை மற்றும் சுற்றுலா பாதைகளில் இருந்த பலரும் இந்த பேரழிவில் சிக்கியுள்ளனர்.

ராசுவா மாவட்டத்தில் தொடங்கிய வெள்ளம் போதேகோஷி ஆற்றின் வழியாக கீழ்நோக்கி பரவியது. இதன் தாக்கம் நுவாகோட், தாதிங், கோர்கா, சித்வான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பதிவாகியுள்ளது.
வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் மட்டுமின்றி, நீர்மின் திட்டங்களும் சேதமடைந்துள்ளன. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் குவிந்துள்ளதால், மீட்புப் பணிகளும் சவாலாக மாறியுள்ளன.
காலநிலை மாற்றத்திற்கு தொடர்பு உள்ளதா?
இந்த வெள்ளத்திற்கு ‘காலநிலை மாற்றம்தான் நேரடி காரணம்’ என்று தற்போது நம்மால் கூற முடியாது. ஆனால், இமயமலைப் பகுதியில் வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால் பனிப்பாறை ஏரிகள் பெரிதாகுதல், பனிப்பாறைச் சரிவுகள் மற்றும் Glacial Lake Outburst Flood – GLOF போன்ற அபாயங்கள் அதிகரிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

எனவே, இந்த பேரழிவை பொறுத்தவரை, உடனடி காரணம் பனிப்பாறைச் சரிவு மற்றும் அதனால் ஏற்பட்ட திடீர் நீர்ப்பெருக்கு என்றாலும், காலநிலை மாற்றத்துடன் தொடர்பு இருப்பதாகவே கருதவேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நீண்டகால பின்னணி மற்றும் இமயமலையில் வேகமாக மாறிவரும் பனிப்பாறை சூழல் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு போன்றவற்றை தனித்தனியாக பிரித்துப் பார்ப்பதே அறிவியல் ரீதியாக சரியானது என்கிறார்கள்.
ஒரே பகுதியில் மீண்டும் மீண்டும் வெள்ளம்…
இந்த சம்பவம் நேபாளத்தின் அந்தப் பகுதியில் ஏற்பட்ட முதல் பனிப்பாறை சார்ந்த வெள்ளம் அல்ல. 2025 ஜூலை 8-ம் தேதியும் இதே போதேகோஷி ஆற்றுப் பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ல்ஹெண்டே ஆற்றில் ஏற்பட்ட Glacial Lake Outburst Flood காரணமாக வெள்ளம் ஏற்பட்டதாக நேபாளத்தின் Department of Hydrology and Meteorology தெரிவித்திருந்தது.
அந்த வெள்ளத்தில் நேபாளம் – சீனாவை இணைக்கும் பாலம் உள்ளிட்ட முக்கிய உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. அதாவது, ஒரே இமயமலைப் பகுதியில் ஒரு ஆண்டுக்குள் மீண்டும் பனிப்பாறை சார்ந்த மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

உயரமான இமயமலைப் பகுதிகள், செங்குத்தான சரிவுகள் மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகள் கொண்ட நேபாளத்தின் புவியியல் அமைப்பே அந்நாட்டை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக மாற்றியுள்ளது.
உயரமான மலைப்பகுதிகளில் இருந்து ஆறுகள் மிகக் குறுகிய தூரத்தில் ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக வேகமாக கீழ்நோக்கிப் பாய்கின்றன. இதனால், மேல்பகுதியில் பனிப்பாறை சரிவு, பனிப்பாறை ஏரி உடைதல் அல்லது நிலச்சரிவு போன்ற ஒரு சிறு நிகழ்வு ஏற்பட்டால் கூட, அதன் தாக்கம் சில மணி நேரங்களுக்குள் கீழ்ப்பகுதிகளில் மிகப்பெரிய பேரழிவாக மாறிவிடுகிறது.
நேபாளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவும் இதற்கு மற்றொரு மிகப்பெரிய உதாரணமாக மாறியுள்ளது. இதுவே நேபாளத்தை உலுக்கிய இந்த பெருவெள்ளத்தின் பின்னணியில் தற்போது கிடைத்துள்ள முக்கியமான அறிவியல் விளக்கங்களாக உள்ளன.