அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

பரந்தூர் விமான நிலையம் கைவிடல்; சட்டப் பேரவையில் திமுக – தவெக இடையே கடும் வார்த்தைப் போர்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் முன்மொழியப்பட்ட பசுமைவெளி சர்வதேச விமான நிலையத் திட்டத்தால் விவசாய நிலங்கள், சுற்றுச்சூழல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இத்திட்டத்தைக் கைவிடுவதாக சட்டப்பேரவையில் அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. விமான நிலையத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பே பரந்தூரைச் சுற்றியுள்ள நிலங்கள் வாங்கப்பட்டது குறித்து ஆளும் கட்சி அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களுக்கும் இடையே காரசாரமான குற்றச்சாட்டுகள் பரிமாறப்பட்டன.

தவெக- திமுக மோதல்:

பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவது குறித்து விரிவான திட்ட அறிக்கை பொதுவெளியில் வருவதற்கு முன்பே, அரசியல் கட்சியுடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பரந்தூரைச் சுற்றியுள்ள பரந்த நிலப்பரப்புகளை வாங்கியுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டப்பேரவையில் குற்றம் சாட்டினார். மேலும் ஒரு நிறுவனம் அப்பகுதியில் நிலப்பகுதியில் கையகப்படுத்தி, ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை – லாட்டரி மாப்பிளை:

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுவதாக தவெக அரசு அறிவித்ததையடுத்து திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களுக்கு இடையே கடும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை – லாட்டரி மருமகன் என்ற விமர்சனங்கள் சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தின.

தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பரந்தூர் விமான நிலைய விவகாரம் தொடர்பான விவாதத்தில் “ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமான முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை என்று பேசினால், எந்த லாட்டரி மருமகனுக்காக புதிய விமானம் நிலையமா? என்று நாங்களும் கேட்க வேண்டியிருப்பதாக கடுமையான ஆவேசத்துடன் கூறினார். பரந்தூர் விமான நிலையம் ஏன் அமைக்கப்பட்டது என்பது குறித்தும் தவெகவிற்கு விளக்கம் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் பேசினார். அப்போது பரந்துர் விமான நிலையத்திற்கான இந்த இடம் எந்த உள்நோக்கத்துடனும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பின்னதாக தேர்வு செய்யப்பட்டது என தங்கம் தென்னரசு கூறினார்.

சென்னையின் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கடல், தொழில் மண்டலங்கள், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களால் விமான நிலையம் அமைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும், மேற்குப் பகுதியில் பன்னூர் மற்றும் பரந்தூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டு, தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பரந்தூர் விமானநிலையம்- எம்.எல்.ஏ கள் கருத்து:

எடப்பாடி பழனிசாமி – அதிமுக:

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில், ஏற்கெனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் நிலை என்னவாகும்?என்று கேள்வி எழுப்பினார். அந்த நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படுமா என்றும் அரசிடம் விளக்கம் கேட்டார் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமி. இதே போன்று நிலத்தை விவசாயிகளுக்கே அளிப்பீர்களா? என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆஸ்டின் – திமுக எம்.எல்.ஏ.:

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின், பரந்தூர் விமான நிலையம் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், திட்டம் ரத்து செய்யப்பட்டால் முதலீட்டாளர்கள் தமிழகத்தைப் பற்றி தவறாக நினைக்கக்கூடும் என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சியில் சுமார் 2,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டதாகவும் சட்டப்பேரவையில் குறிப்பிட்டார்.

போஜராஜன் – பாஜக.

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு உடனடியாக மாற்று இடத்தைக் கண்டறிந்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தடை ஏற்படாமல் அரசு செயல்பட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் போஜரான் தெரிவித்துள்ளார்.

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா:

பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் மக்களை பாதிக்காதவாறு மாற்று தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் இதன் மூலம் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது விமான நிலைய பரந்தூர் திட்டத்திற்காக சுமார் 5,846 ஏக்கர் தேவைப்பட்ட நிலையில், 90% நிலம் கையகப்படுத்தப்பட்டதாக திமுக தரப்பில் கூறப்பட்டதற்கு அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு தெரிவித்தார். சுமார் 48% மட்டுமே, அதாவது 1,802 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதற்கு முன், திமுக தரப்பில் 2,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், திட்டத்தை கைவிட்ட பிறகு அந்த நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப வழங்கப்படுமா? என்ற கேள்வியை அரசியல் கட்சி தலைவர்கள் முன்வைக்கின்றனர்.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of Jansi Malashree V

Jansi Malashree V