இலங்கையில் எல்-நினோ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாக அதிகரித்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
இதன்படி, இடர் முகாமைத்துவ நிலையத்தினால் இன்று (22) அதிகாலை வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரகாரம், 07 மாவட்டங்களைச் சேர்ந்த 23 பிரதேச செயலக பிரிவுகள் எல்-நினோ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், 25628 குடும்பங்களைச் சேர்ந்த 81865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 20 பிரதேச செயலக பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக அந்த நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, 23048 குடும்பங்களைச் சேர்ந்த 72153 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அம்பாறை, பதுளை, மட்டக்களப்பு, மொனராகலை, பொலன்னறுவை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களே எல்-நினோ நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளன.
மொனராகலை மாவட்டத்தில் 10264 குடும்பங்களைச் சேர்ந்த 33023 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த அனைத்து மக்களுக்கு குடிநீர் இடர் முகாமைத்துவ நிலையத்தினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
மொனராகலை மாவட்டத்திற்கு அடுத்தப்படியாக மட்டக்களப்பு மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 9547 குடும்பங்களைச் சேர்ந்த 28523 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அனைவருக்கும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் 2804 குடும்பங்களைச் சேர்ந்த 8783 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பதுளை மாவட்டத்தில் 2059 குடும்பங்களைச் சேர்ந்த 7876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

எல்-நினோ நிலைமையினால் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழுவிடம் கேட்டறிந்துக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் எல்-நினோ நிலைமையினால் எழுந்துள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.
மக்களின் குடிநீர் தேவைகள் உள்ளிட்ட ஏனைய நீர்த்தேவைகளை பூர்த்தி செய்தல் மற்றும் விவசாயத்திற்கு தேவையான நீரை உரிய முறையில் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, நாடு முழுவதற்கும் எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மீண்டும் வறட்சியுடனான காலநிலை ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இவ்வாறு வறட்சியுடனான காலநிலை தொடரும் பட்சத்தில், அதன் தாக்கத்தினால் விவசாயம், பெருந்தோட்டத்துறை, நன்னீர் மீன்பிடித்துறை, நீர் மற்றும் மின்சார விநியோகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி, அதிகாரிகளிடம் கேட்டறிந்துக்கொண்டுள்ளார்.
வறட்சியினால் பாதிப்பு ஏற்படக்கூடிய காலப் பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும், சேவைகளையும் தடையின்றி வழங்குவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், வறட்சியினால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அவர்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை செயற்படுத்துவதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இடர் முகாமைத்துவ பிரிவுடன் கலந்துரையாடல்களை நடாத்தி, தேவையான திட்டங்களை வகுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.