சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். விழாவில் சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள், நீதியரசர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்கள், முப்படை வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து நடைபெற்ற உரையில், தமிழக மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் முதலமைச்சர் விஜய் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்திற்காக தங்களது உயிரையும் உடைமைகளையும் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் சுதந்திரம் என்பது அரசியல் விடுதலை மட்டுமல்ல என்றும், லஞ்சம் மற்றும் ஊழலில் இருந்து மக்களை காப்பாற்றுவதும் விடுதலைக்கு நிகரானது என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார். மக்கள் தேவையின்றி அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், அரசு அலுவலகங்கள் மக்கள் சேவை மையங்களாக செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு அலுவலர்களும் மக்களின் குறைகளைக் கேட்டு தீர்ப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கம் போது கண்ணியமாக நடத்த வேண்டும் எனவும் அரசு அதிகாரிகளக்கு அறிவுறுத்தியுள்ளார். பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமூக நீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் விஜய் கூறினார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் Gen Z இளைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்களுக்கான அரசு திட்டங்களை மேற்கொள்ளும்:
மக்களுக்கான அனைத்துத் திட்டங்களையும் ஒன்றிய அரசின் நிர்வாக ஒப்புதலோடு மேற்கொள்ளும் என தெரிவித்த விஜய், மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகள் மற்றும் கொள்கைக்கு எதிராக இருந்தால் எதிர்க்கும் என தெரிவித்தார். அதே நேரத்தில், மக்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை தொடர்ந்து மேம்படுத்தி செயல்படுத்துவோம் என்றும் கூறினார். குறிப்பாக வருகின்ற செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ளதாகவும், தாய்மாமன் திட்டம்: வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதல், பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நலன், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான திட்டங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். இதோடு சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வகையில் புதிய AI செயலி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுபான விற்பனை நிலையங்களின் நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், 717 டாஸ்மாக் கடைகளில் கணினிமயமாக்கப்பட்ட நிர்வாகம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கோயில் நிர்வாகத்தை மேலும் வெளிப்படையாக மாற்றும் வகையில், கணக்கெடுப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஆன்லைன் முறைக்கு கொண்டு வருவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், வருவாய்த்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளில் லஞ்சம் தொடர்பான புகார்களைப் பெறுவதற்கும், ஊழலைத் தடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னாள் படைவீரர்களுக்கு நிதியுதவி உயர்வு:
நாட்டிற்காக தன்னலமற்ற சேவை செய்த முன்னாள் படைவீரர்களின் திருமண நிதியுதவி ரூ.25,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னாள் படைவீரர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையும் ரூ.5,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு உதவித்தொகை உயர்வு, வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையும் உயர்த்தப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
இறுதியாக, “மக்கள்தான் ஆட்சியாளர்கள்; நாங்கள் மக்களின் வேலைக்காரர்கள்” என்ற அடிப்படையில் அரசு செயல்படும் எனக் கூறிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தை மக்கள் நலன், சமூக நீதி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உருவாக்க உறுதி ஏற்போம் என தெரிவித்தார்.