தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்கும் நோக்கில், மாநில அளவிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழியை வாசிக்க, அவரைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்பதுடன், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதில் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதாகவும் உறுதிமொழி ஏற்றனர்.
மேலும், தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுப்பதுடன், போதைப்பொருளின் தீமைகள் குறித்து சுற்றியுள்ளவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதியேற்றனர்.
காவல்துறைக்கு மரியாதை:
தமிழகத்தில் போதைப்பொருள் உற்பத்தி, கடத்தல் மற்றும் சட்டவிரோதப் புழக்கத்தைத் தடுப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளைப் பாராட்டும் வகையில், 15 காவல்துறை அதிகாரிகளுக்கு “முதல்வரின் காவல் பதக்கம்” வழங்கப்பட்டது. மேலும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் காவல்துறையின் பங்களிப்பை பாராட்டிய முதலமைச்சர் விஜய், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதில் அரசு மட்டுமின்றி பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கும், போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் எனவும் போதைப்பொருள் தடுப்பு இயக்கத்தின் போது தெரிவிக்கப்பட்டது.