இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த போராட்டம் நேற்றைய தினம் நடத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீவப் பகுதி மீனவர்கள் கடல் நடுவில் படகுகளில் பயணித்து, கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை கடலில் இறங்கி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு நடத்தப்பட்ட போராட்டத்தை அடுத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை மீனவர்கள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைதீவு, அனவைத்தீவு, யாழ்குடா, பாக்குநீரிணை மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவ சமூகங்களாகிய தாங்களையும், தமது வாழ்வாதாரம், கடல்வளம் மற்றும் நாட்டின் கடல்சார் மரபையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என மீனவர்கள், ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த பொறுப்பை நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் பல தசாப்த காலமாக இழுவைப் படகு முறையில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் மீனவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்திய மீனவர்களின் பிரவேசமானது, வெறும் சட்டவிரோத மீன்;பிடி நடவடிக்கை மாத்திரமன்றி, கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப் பெருக்கப் பகுதிகளை அழிக்கப்பட்டு, கடல் உயிரினப் பல்வகைமை, மீன்வளங்கள் ஆகியன கடுமையாக பாதிக்கின்றது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அத்துமீறிய செயற்பாடுகள் வடக்கின் கடல்சார் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையின் கடல்வள உரிமைகளுக்கு நேரடியாகவே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த தமிழக மீனவர்களின்;, இழுவை மடி விசைப்படகுகள் கடந்த 16ம் தேதி முதல் 18ம் தேதி வரை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் யாழ்ப்பாணம் – தீவப் பகுதிக்குள் பிரவேசித்து தமது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
தீவப் பகுதியைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பட்ட பாரம்பரிய மீனவர்களின் ஐந்து கோடி இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியை கொண்ட நண்டு வலைகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் யாழ். மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.
மீனவ பிரச்சினைக்கு ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் நிரந்தர தீர்வை வழங்காது, இலங்கை மீனவர்களை ஏமாற்றியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கை – இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரம் தொடர்ந்தும் பலியாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ். மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கின் பாரம்பரிய கடல்சார் வாழ்க்கை மரபு அழிந்து விடும் பட்சத்தில், அது வடக்கு மக்களுக்கு மாத்திரமன்றி, முழு இலங்கைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என மீனவர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், தமது வாழ்வாதார பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதேவேளை, இந்த போராட்டமானது, எந்தவொரு நாட்டுக்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதல்ல என குறிப்பிட்டுள்ள யாழ்ப்பாணம் மீனவர்கள், இது கடலை நம்பி வாழும் குடிமக்களின் நீதிக்கான அமைதியாக குரல் எனவும் கூறியுள்ளனர்.
