மதுரை மக்களை சில மாதங்களாக பணி நிமிர்த்தமாகக் கூட வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. கோடை வெயிலா? இல்லை மழைக்காலமா? என கேள்வி எழுப்பும் அளவிற்கு சுட்டெரிக்கும் இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையுமோ? என்ற ஏக்கத்தில் காத்திருக்கின்றனர் மதுரை மக்கள். அந்தளவிற்கு மற்ற மாவட்டங்களை விட மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் கொடூரமாக உள்ளது. இந்த வெப்ப அலை எப்போது குறையும்? ஏன் மதுரை நகரை மட்டும் வெயில் வாட்டி வதைக்கிறது? என்ன காரணம்? என்பது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர். துரை.
எல் நினோ தான் வெயிலின் தாக்கம் அதிகரிக்கக் காரணமா?
பசிபிக் பெருங்கடலில் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடலின் மேற்பரப்பு இயல்பை விட அதிகம் வெப்பமாகும் நிகழ்வே எல்நினோ என்றழைக்கப்படுகிறது. எல்நினோ காலங்களில், பசிபிக் பெருங்கடலில் மேற்குப் பகுதியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். காற்று அனைத்தும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வந்துக்கொண்டிருக்கும் போது, காற்று மேல்நோக்கி அதிகரித்து, மேற்கு இந்திய கடலில் வெப்ப அலையை அதிகரிக்கும். இந்த நிகழ்வு மழை மேகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழையும் குறைவாக பொழிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
மற்ற மாவட்டங்களை விட மதுரையில் ஏன் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது?
ஜூலை மாதம் பொதுவாக தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தால் தமிழகத்தின் உள்பகுதிகளில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாகக் குறைவது வழக்கம். ஆனால், 2026 ஜூலை மாதத்தில் மதுரையில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பநிலை தொடர்ந்து உயர்வாக பதிவானது. குறிப்பாக, ஜூலை 15 அன்று மதுரை விமான நிலையத்தில் 42.5 டிகிரி செல்சியஸ் பதிவாகி, அன்றைய தினம் நாட்டிலேயே அதிக வெப்பநிலை பதிவான இடங்களில் ஒன்றாக மதுரை விளங்கியது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மதுரையில் பதிவான அதிக வெப்பநிலைக்கு முக்கியக் காரணம் தென்மேற்கு பருவமழை தற்காலிகமாக பலவீனமடைந்ததே ஆகும். இதன் காரணமாக அரபிக்கடலில் இருந்து தென் தமிழகத்திற்கு ஈரப்பதம் கொண்ட காற்றின் வரத்து குறைந்தது. அதன் விளைவாக மேகமூட்டமும் மழைப்பொழிவும் குறைந்து, அதிகளவிலான சூரிய கதிர்வீச்சு நிலப்பரப்பை நேரடியாக வெப்பப்படுத்தியது.
மேலும், உருவாகிக் கொண்டிருந்த எல் நினோ (El Niño) சூழல் தென்மேற்கு பருவமழையின் வலிமையை மேலும் பலவீனப்படுத்தியதால், தென் தமிழகத்தில் வளிமண்டல மேலெழுச்சி (Convection) மற்றும் மேக உருவாக்கம் குறைந்து, பகல் நேர வெப்பநிலை மேலும் உயர்ந்தது.
மதுரை, மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு (Rain Shadow) பகுதியில் அமைந்துள்ளது. அரபிக்கடலில் இருந்து வரும் ஈரமான காற்று, மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குச் சரிவுகளில் பெரும்பாலான ஈரப்பதத்தை மழையாக இழக்கிறது. பின்னர் மலையின் கிழக்குப் பகுதியில் கீழிறங்கும் காற்று, கீழிறங்கும்போது அழுத்தம் அதிகரிப்பதால் வெப்பமடைந்து உலர்கிறது . இதன் விளைவாக மேகமூட்டமும் மழைப்பொழிவும் குறைந்து, பகல் நேர வெப்பநிலை அதிகரிக்க ஏற்ற சூழல் உருவாகிறது.
மேலும், மழைப்பொழிவு குறைந்ததால் மண்ணில் ஈரப்பதம் குறைந்தது. இதனால், சூரிய வெப்பத்தின் பெரும்பகுதி நிலத்தையும் காற்றையும் நேரடியாக அதிகமாக வெப்பப்படுத்தியது. இதன் விளைவாக பகல் நேர வெப்பநிலை மேலும் உயர்ந்தது .
அதேநேரத்தில், மதுரை கடற்கரையிலிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள உள்நாட்டுப் பகுதியாக இருப்பதால், கடற்காற்றின் குளிர்விக்கும் தாக்கம் மிகவும் குறைவாக இருந்தது. மேலும், மேற்கில் பழனி மலைத்தொடர், தென்மேற்கில் வருஷநாடு–மேகமலை மலைத்தொடர்கள் மற்றும் வடக்கில் சிறுமலை ஆகிய உயரமான மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள மதுரையின் நில அமைப்பும், தென்மேற்கு பருவமழை பலவீனமாக இருக்கும் காலங்களில் வெப்பம் அதிகரிக்க சாதகமான சூழலை உருவாக்குகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விளக்கத்தின்படி, தென்மேற்கு பருவமழை பலவீனம், உருவாகிக் கொண்டிருந்த எல் நினோ, மேற்கு தொடர்ச்சி மலையின் மழை மறைவு விளைவு, குறைந்த மேகமூட்டம், மண்ணின் ஈரப்பதம் குறைவு, கடல்சார் குளிர்விக்கும் தாக்கம் குறைவு மற்றும் மதுரையின் தனித்துவமான நில அமைப்பு ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்ததே, 2026 ஜூலை மாதத்தில் மதுரையில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை பதிவாக முக்கியக் காரணமாக அமைந்தது.
தற்போதைய வானிலை முன்னறிவிப்பின்படி, வெள்ளிக்கிழமை முதல் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுப்பெறுவதால் மேகமூட்டம் அதிகரித்து, பரவலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் பகல் நேர வெப்பத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை இயல்பான அளவை நோக்கி குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) மண்டல வானிலை முன்னறிவிப்பு மைய இயக்குநர் டாக்டர் வி. ஆர். துரை தெரிவித்தார்.

இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழையும் வழக்கத்தை விட குறைவாக உள்ளது. அரபிக்கடலில் இருந்து வரக்கூடிய காற்று நிலப்பகுதியில் வரும் போது ஈரப்பதம் குறைந்து காணப்படுவதால், மேகங்கள் உருவாவதைத் தடுத்து மழையின் அளவும் குறைவாக உள்ளது.
இதோடு மட்டுமின்றி மதுரையைச் சுற்றி மூன்று புறங்களிலும் மலைகள் சூழ்ந்துள்ளது. சிறுமலை, மேற்குத்தொடர்ச்சி, அழகர் மலை, பழனி மலை, என சுற்றி சுற்றி மலைகள் இருப்பதால், ஒருவேளை கடற்பகுதியில் இருந்து ஈரப்பதமான காற்று கொஞ்சம் வந்தாலும் திரும்பி செல்வதற்கு வழியில்லாமல் தவிக்கும். வென்டிலேசன் என்று சொல்லக்கூடிய காற்றோட்டம் இல்லாத போது வெப்பத்தைத் தான் அதிகம் தக்க வைத்துக்கொள்ளும். மதுரையில் இந்த நிலை அதிகம் நீடிப்பதால் வெயிலின் தாக்கமானது அதிகமாக உள்ளது எனவும் கூறுகிறார் வி.ஆர். துரை.
எல் நினோவா இல்லாமல் லா நினாவாக இருந்த போதும் மதுரையில் கடந்த 2025 ஆம் ஆண்டிலும் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக 40 டிகிரி அளவில் வெப்பநிலை நிலைத்திருந்ததாகவும், 2026 ஆம் ஆண்டு அதாவது இந்த ஆண்டும் ஜூலை முதல் வாரத்திலிருந்து 40 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மதுரைக்கு அடுத்தப்படியாக திருச்சி, அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் வெப்ப காற்று வீசினால் தடுத்து நிறுத்துவதற்கான சூழல் இல்லை. கடல் பகுதிக்கு அருகில் இருப்பதால் வெப்ப காற்று அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது.
இன்னும் 2 தினத்தில் மதுரையில் வெப்பம் தணியும்:
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வரக்கூடிய அடுத்த இரண்டு தினங்களில் சற்று மழை பொய்யக்கூடும். இதனால் வெயிலின் தாக்கமானது படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி. ஆர். துரை தெரிவித்துள்ளார். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, மாவட்டங்களில் அடுத்த இரண்டு அல்லது மூன்று தினங்களில் அதீக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.