2015 ஆம் ஆண்டு இந்திய சினிமாவில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்திய பாகுபலி திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் நிறைவேறியுள்ளது. அவ்வகையில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலியின் படைப்பான பாகுபலி: தி பிகினிங் (2015) மற்றும் பாகுபலி: தி கான்க்ளூஷன் (2017) என்ற இருபாகங்களையும் ‘பாகுபலி தி எபிக்’ என்ற தலைப்பில் ஒரே படமாக அக்டோபர் 31 வெளியிடுகிறார்கள் படக்குழுவினர். பாகுபலியின் கதை மகிஷ்மதி என்ற கற்பனை அரசை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு, துரோகம், வீரியம், காதல், நீதியுணர்வு மற்றும் அரசாட்சி ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் காவியம். ஒரு குழந்தை நதியில் ஒழுகி வந்து, ஒரு கிராமத்தில் வளர்கிறது. அவனே பின்னர் மகிஷ்மதி அரசின் உண்மையான வாரிசு என்று தெரியும் போது, கதை ஒரு பரபரப்பான திருப்பத்தை எடுக்கிறது.
இந்தப் படம் கலை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் ஒரு புதிய உச்சத்தை எட்டியது. எம். எம். கீரவாணியின் இசை மனதை கவர, செந்தில் குமார் அவர்களின் ஒளிப்பதிவு மற்றும் சபு சிரில் அவர்களின் கலை இயக்கம் இணைந்து திரைப்படத்தை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றன. நடிகர்களின் ஆழமான உணர்வுப்பூர்வமான நடிப்பு – குறிப்பாகப் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் மற்றும் நாசர் ஆகியோரின் பங்களிப்பு ரசிகர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. “பாகுபலி” இந்திய சினிமாவின் பார்வையை மாற்றிய திரைப்படம். இது தெற்கிந்திய படங்கள் உலகத் திரை அரங்குகளின் கவனத்தை ஈர்க்கச் செய்தது. அதனுடைய அபார காட்சிப் பணிகள், சீரான கதை அமைப்பு மற்றும் புதுமையான காட்சித் தொழில்நுட்பம் இந்திய திரைத்துறையின் திறனைக் கண்முன் நிறுத்தியது என்றால் அதில் மாற்றுக்கருத்து இல்லை.
இத்தனை சிறப்பு மிகுந்த பாகுபலி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் இரண்டு பங்கங்களும் இணைந்து ஒரே பாகமாக வெளியாகவுள்ளது என்பது மக்களிடையே உற்சாகத்தோடு ஒரு எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது. ஒரு புது முயற்சியோடு மீண்டும் வெளியாகும் இந்த திரைப்படமும் காலத்தை கடந்து பேசும்பொருளாக மாறுமா?