நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார். நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளில் முதல்கட்டத்தில் 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 122 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத் தேர்தல் நாடு முழுவதும் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, எல்ஜேபி, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா, ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு புறம் எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ(எம்-எல்), சிபிஐ, சிபிஎம், விகாசீல் இன்சான் கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுரான், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தனித்தனியாக போட்டியிடுகின்றன.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாகண்பந்தன் கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
இந்தநிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் தேஜஷ்வி யாதவ், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைவாய்ப்பு பெறாத அனைத்து குடும்பங்களுக்கும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவோம். எங்கள் அரசு பதவியேற்ற 20 நாட்களுக்குள் இது தொடர்பாக சட்டம் இயற்றுவோம். அடுத்த 20 மாதங்களுக்குள் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவ்வின் இந்த அறிவிப்பு பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.