அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி
அ.ம.மு.க வேண்டுகோள் விலகல் – TTV தினகரன் நீக்கம் கடல் மட்ட உயர்வு – ஆய்வு எச்சரிக்கை லண்டனில் CM ஸ்டாலின் – புதிய MoUs அ.ப.ஜ. கட்சி தலைவரின் புகார் பிரசாரம் யாரின் சொற்கள் உண்மையா? – உதயநிதி

இலங்கை இயற்கை அனர்த்தங்களில் 6 பேர் உயிரிழப்பு – தொடரும் அபாய எச்சரிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

நாவலபிட்டி மற்றும் ஹட்டன் ஆகிய பகுதிகளில் வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்து வீழ்ந்தமையினால் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

ஹட்டன் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் 3 பெண்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், நாவலபிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், வட்டவலை பகுதியில் வீதியில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வெள்ள நீரில் அடித்துச் சென்று உயிரிழந்துள்ளதார்.

மேலும், இந்த அனர்த்தங்களினால் அனர்த்தங்களினால் 2 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

3 பேர் அனர்த்தங்களினால் காயமடைந்துள்ளனர்.

மக்கள் இடம்பெயர்வு

இந்த அனர்த்தங்களினால் 769 குடும்பங்களைச் சேர்ந்த 2971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இயற்கை அனர்த்தங்களினால் மொத்தமாக 36 பிரதேச செயலக பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 479 குடும்பங்களைச் சேர்ந்த 1881 பேர், 9 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களினால் 129 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிடுகின்றது.

மண்சரிவு அபாயம் தொடர்கின்றது.

கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் இருக்கம் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் பஸ்பாககே கோரலம மற்றும் கங்க இஹல கோரல ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, குறித்த மாவட்டங்களின் ஏனைய பகுதிகளுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிக மழைவீழ்ச்சி நுவரெலியாவில்

கடந்த 24 மணிநேரத்தில் நுவரெலியா – நோர்ட்டன் பகுதியிலேயே அதிகளவிலான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதன்படி, நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

நேற்று (03) காலை 8.30 முதல் இன்று (04) காலை 830 வரையான 24 மணிநேரத்திலேயே இந்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கெனியன் பகுதியில் 234.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், லக்ஸபான பகுதியில் 208 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், காசல்ரீ பகுதியில் 164 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மாவுசாகல பகுதியில் 125 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மேல் கொத்மலை பகுதியில் 110.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், கொத்மலை பகுதியில் 105 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, கடந்த 4 நாட்களில் வட்டவல பகுதியில் மாத்திரம் 661 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி பேராசிரியர் வசந்த சேனாதீர தெரிவிக்கின்றார்.

இந்த பகுதியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 204 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

ஏனைய சில பகுதியில் கடந்த மூன்று தினங்களில் மாத்திரம் 150 முதல் 500 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

வானிலை அறிக்கை

சபரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது,

தற்போது நாட்டில் காணப்படும் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலை தொடர்ந்தும் 24 மணிநேரத்திற்கு காணப்படும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடமத்திய, வடமேல், சபரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடை 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடான பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசக்கூடும் என்பதனால், அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தளம் முதல் கொழும்பு ஊடான காலி வரையாகன கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Picture of R.A. Prasadh

R.A. Prasadh