இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுக்கு நீதியும், பொறுப்புக்கூறலும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ‘நீதியின் ஓலம்” போராட்டம் இன்றுடன் (17) நிறைவடைந்தது.
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் கடந்த 14ம் தேதி முதல் இந்த போராட்டம் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெற்றன.
உள்நாட்டு விசாரணைகளுக்கு அப்பால், சர்வதேச விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது.
தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
செம்மணி மனிதப் புதைக்குழியிலிருந்து 562 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்;த பின்னணியிலேயே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இவ்வாறு இடம்பெற்ற போராட்டத்தின் இறுதி நாளான இன்று, செம்மணி பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் பேரணியாக யாழ்ப்பாணம் நகரை நோக்கி பயணித்திருந்தனர்.
யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் அலுவலகத்தை சென்றதுடன், அங்கு சர்வதேச விசாரணைகளை வலியுறுத்திய மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச விசாரணைக்கான அழுத்தத்தை பிரயோகிப்பதன் ஊடாக, செம்மணி மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்.



