காஸாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 20 அம்ச அமைதி திட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் சேர்ந்து அவர் உருவாக்கி உள்ள இந்த திட்டத்தின் விவரம்:
- இரண்டு தரப்பினரும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, 72 மணி நேரத்திற்குள் அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும்.
- சிறைகளில் உள்ள 250 பாலஸ்தீன ஆயுள் தண்டனை கைதிகளையும், 1,700 காஸா மக்களையும் இஸ்ரேல் விடுதலை செய்ய வேண்டும்.
- போர் நிறுத்தத்திற்குப் பின், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து வெளியேற வேண்டும்.
- ஆயுதங்களை கைவிட்டு, ஹமாஸ் அமைப்பு கலைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும்.
- ஆயுதங்களை கைவிடாவிட்டால், தாக்குதல் மூலம் காஸாவை இஸ்ரேல் கைப்பற்றி சர்வதேச படையிடம் ஒப்படைக்கும்.
- இந்த ஒப்பந்தத்தை ஏற்றால் காஸாவுக்கு முழு நிவாரண உதவிகள் அனுப்பப்படும்.
- ஐ.நா., செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் காஸாவில் தடையின்றி நிவாரண உதவி.
- மருத்துவமனைகள், உணவகங்கள், இடிபாடுகளை அகற்ற உபகரணங்கள் அனுமதி, சாலைகள் திறப்பு.
- டிரம்ப் தலைமையில் சர்வதேச குழுவின் மேற்பார்வையில் பாலஸ்தீன குழு காஸாவில் இடைக்கால நிர்வாகத்தை நடத்தும்.
- டிரம்ப் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காஸா மறுக்கட்டமைக்கப்படும்.
- காஸாவில் சிறப்பு சலுகைகளுடன் கூடிய பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
12.காஸாவில் இருந்து வெளியேற யாரும் வற்புறுத்தப்படமாட்டார்கள். விரும்பவர்கள் வெளியேற அனுமதி உண்டு. - காஸா நிர்வாகத்தில் தலையிடமாட்டோம் என்று ஹமாஸ் உறுதியளிக்க வேண்டும்.
- புதிய காஸாவில் இருந்து ஹமாஸால் அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும்.
- பிற நாடுகளுடன் இணைந்து காஸாவில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சர்வதேச படையை அமெரிக்கா உருவாக்கும்.
- காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கவோ, இணைத்துக் கொள்ளவோ செய்யாது.
- இந்த ஒப்பந்த்தை ஹமாஸ் செயல்படுத்தாவிட்டால் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் மட்டும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- அனைத்து தரப்பினரும் இணக்கமாக வாழ பல்சமய குழு அமைக்கப்படும்.
- போர் நிறுத்தம், மறுக்கட்டமைப்பில் முன்னேற்றம் ஏற்பட்டால், பாலஸ்தீன நாட்டின் அமைப்புக்கு வழிவகுக்கப்படும்.
- இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா உதவும்.
எந்தெந்த நாடுகள் வரவேற்பு
இந்த அமைதி திட்டத்துக்கு எகிப்து, ஜோர்டான், பாகிஸ்தான், துருக்கி, கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.
இந்தியாவும் வரவேற்பு
டிரம்ப்பின் இந்தத் திட்டம் பாலஸ்தீனம், இஸ்ரேல் மக்களுக்கு மட்டுமல்லாமல் மேற்காசிய பிராந்தியத்துக்கு நீண்டகால அமைதியை ஏற்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மோடியின் இந்தப் பதிவை டிரம்ப் தனது ட்ரூத் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
எனினும், இந்த அமைதி திட்டத்துக்கு ஹமாஸ் தரப்பில் உறுதியான பதிலளிக்கப்படவில்லை.